'இலங்கை நிவாரணப் பணிக்காக இந்திய அரசு 500 கோடி ஒதுக்கியதற்கு நன்றி. அதே நேரத்தில், தமிழக முதல்வர் அனுப்பிய கடிதத்தில் உள்ள திட்டங்களையும் நிறைவேற்றினால் இன்னும் நன்றியுடையவர்களாக இருப்போம்...' என்று சமீபத்தில் பிரதமரை சந்தித்த தமிழக எம்.பி-க்கள் குழு முறையிட்டது.
அவர்களிடம், 'ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் தொகையை விவசாய வளர்ச்சிக்காகச் செலவிடும் நோக்கில் இந்திய வேளாண் விஞ்ஞானிகள் ஆறு பேரை இலங்கைக்கு அனுப்பி ஆய்வு செய்ததை' கோடிட்டுக் காட்டினார் பிரதமர்.
பிரதமரே பெருமைப்பட்ட இந்த விவசாய விஞ்ஞானிகளின் பயணம்தான் தமிழகத்தில் மிகப்பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது!
இலங்கை சென்ற அந்த ஆறு பேரில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தரான முருகேசபூபதியும் ஒருவர். இவர் இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறச் சென்றதைக் கடுமையாகக் கண்டித்து, கடந்த 21-ம் தேதி கோவை வேளாண்
பல்கலை வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது, பெரியார் திராவிடர் கழகம். 'துணைவேந்தரே... ஈழத்துக்கு துரோகமிழைக்காதே! சிங்களனுடன் கைகுலுக்காதே!' என்று வார்த்தைகளில் சீறினார்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள்.
பல்கலைக்கழக வாசலில் நின்று, கடுங்குரல் கொடுத்த பெ.தி.க-வின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் பேசினோம். "எறும்புக் கூட்டத்தின் மேல் அனல் அள்ளிப்போட்டுக் கருக்குவதுபோல் ஈழத்தில் தமிழர்களை பொசுக்கிக்கொண்டு இருந்தார்கள். அப்போதெல்லாம் வாய்மூடி இருந்துவிட்டு, இப்போது எங்கேயிருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு பாசம் பொத்துக்கொண்டு வருகிறது? உழைத்தோம், பிழைத் தோம் என்று வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த பூர்வீகத் தமிழர்களை, அவர்களின் சொந்த இடத்திலிருந்து விரட்டி விரட்டி அழித்த இலங்கை அரசாங்கம், அந்தப் பகுதிகளில் சிங்களர்களைக் கொண்டுவந்து குடியமர்த்துகிறது. இந்தக் கேடுகெட்ட செயலுக்கு, 'வடக்கின் வசந்தம்...' என்று பெயராம்!
முகாமில் உள்ள தமிழர்களை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் அவரவர் பகுதியில் மீண்டும் குடியமர்த்தி விடுவதாக ராஜபக்ஷே சொல்வது பச்சைப் பொய். வதை முகாம்களில் சிக்கியுள்ள நம் தமிழர்கள், சுகாதாரச் சீர்கேட்டால் தினம் தினம் கணிசமான பேர் செத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஜனவரிக்குள் 70 சதவிகிதம் பேர் சிதைந்தழிந்து விடுவார்கள் என்பதுதான் ராஜபக்ஷேவின் கணிப்பு.
இலங்கை சென்றுவந்த சில தன்னார்வஅமைப்புகளும் இதைத்தான் சொல்லியிருக்கின்றன. ஆக, எஞ்சியிருக்கும் ஈழத்தமிழர்களையும் இப்படியே கொன்றுவிட்டால், இந்தியாவிலிருந்து கிடைக்கும் 500 கோடி நிதி உள்ளிட்ட அத்தனை உதவிகளும் யாருக்குக் கொடுக்கப் படும்? முழுக்க சிங்களனின் வீடுகளுக்குத்தானே போய் சேரும்! பச்சைக் குழந்தைக்கே புரியும் இந்த சூட்சுமம், இங்கிருக்கும் அரசாங்கங்களுக்குத் தெரியாதா என்ன? மொத்தத்தில், 'வடக்கின் வசந்தம்' எனும் ராஜபக்ஷேவின் கருவறுக்கும் திட்டத்துக்கு நமது அரசாங்கமும் மறைமுகமாக சப்போர்ட் செய்கிறதா?
இந்தத் திட்டத்தின் ஒரு செயலாக்கமாகத்தான் இந்திய விவசாய வல்லுநர்கள் இலங்கை போய் வந்திருக்கிறார்கள். துணைவேந்தர் முருகேசபூபதி உள்ளிட்டவர்கள் அங்கே கள ஆய்வு செய்து கருத்துச் சொல்லியதும், ஆலோசனை வழங்கியதும் சிங்களனை முன்னேற்றத்தான்! அவர்கள் சிங்கள அதிகாரிகளைத்தான் சந்தித்துப் பேசினார்களே தவிர, எந்தத் தமிழனையும் சந்தித்துப் பேச முடியவில்லை! எனவேதான், இந்தத் திட்டத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்!'' என்றார் பொட்டில் அடித்தாற் போல்.
துணைவேந்தர் முருகேசபூபதியை சந்தித்தபோது, 'ஓர் அரசு ஊழியன் என்கிற அடிப்படையில் அரசாங்கம் எனக்குக் கொடுத்த வேலையை செய்யத்தான் அங்கே போனேன். எங்களுடைய பயணத்தை எதிர்ப்பவர்கள், இதைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் தமிழர்களுக்கு துரோகம் பண்ணப் போகவில்லை. போரில் பிழைத்து முகாமில் வாடுகிறவர்களின் மறுவாழ்வுக்காக நிறையச்செய்ய வேண்டும் என்ற எண்ணம், நம் தமிழக மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு நிறையவே இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு பெரிய நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள்.
உடை கொடுத்தோம், உணவு கொடுத்தோம் என்றில்லாமல், அந்த மக்கள் தங்களுடைய எதிர் காலத்தையும் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொலைநோக்குப் பார்வை யில் செயல்படுகிறது அரசாங்கம். அதற்காகத்தான் இப்படி விவசாயப் பணிகளில் அவர்களை ஊக்குவிக்க நினைக்கிறார்கள். இதற்கான கள ஆய்வுக்குத்தான் நாங்கள் போனோம். அங்கே இயற்கைச் சூழல் நன்றாக இருக்கிறது.
கொஞ்சம் மெனக்கெட்டால், விவசாயத்தில் அமோகமான மகசூலை அள்ளலாம். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு விதையில் தொடங்கி, அறுவடைக்கான கருவி வரை எல்லாம் வழங்க நம் அரசாங்கம் தயாராக இருக்கிறது. இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால், முதலில் முகாமில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களுடைய இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டியது அவசியம். முகாமில் இருக்கும் தமிழர்களை சந்திக்க எங்களை அங்கே அனுமதிக்கவில்லை. அவர்களுடைய பரிதாப நிலையைக் கேட்டறிந்தபோது, எங்கள் மனது உடைந்து போய்விட்டது. எனினும், காலம் அந்தக் காயத்துக்கு மருந்து தடவும் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது..." என்றார்.
"இன அழித்தலையே முழு நோக்கமாக கொண்ட இலங்கை அரசு, தமிழர்களின் தாகத்துக்கு தண்ணீர் வார்க்கப் போவதாக சொல்வது 'ஓட ஓட கொன்னவன் பாடை தூக்க வந்தானாம்' என்கிற கிராமிய சொலவடையைத்தான் நினைவூட்டுகிறது!" என்று குமுறுபவர்களின் குரலில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment