Saturday, September 26, 2009

உள்ளாட்சி இடைத் தேர்தல்.... ஒதுங்கும் தேமுதிக!

சென்னை: தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சி மன்றப் பதவிகளுக்கான இடைத் தேர்தலில் இருந்து தேமுதிக ஒதுங்கி நிற்பதாக அக் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

உள்ளாட்சிகளில் காலியாக உள்ள 603 பதவிகளுக்கான இடைத் தேர்தல் வரும் அக்டோபர் 7ம் தேதி நடக்கிறது. சமீபத்திய சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணித்த அதிமுக இந்தத் தேர்தலை புறக்கணிக்கவில்லை.

ஆனால், வழக்கமாக எந்தத் தேர்தலையும் புறக்கணிக்காத தேமுதிக உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆங்காங்கே, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் மட்டும் தனிப்பட்ட முறையில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.

இது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் அளித்துள்ள பேட்டியில்,

இந்த உள்ளாட்சி இடைத் தேர்தலை நாங்கள் பெரிதாக கருதவில்லை. மத்திய தேர்தல் ஆணையத்தாலேயே தமிழகத்தில் முறையான தேர்தலை நடத்த முடியவில்லை. இந் நிலையில் தமிழக தேர்தல் ஆணையம் தேர்தலை எப்படி நடத்தும் என்பது நாம் அறிந்தது தான்.

மேலும் தேர்தலில் போட்டியிட எங்களுக்கு முரசு சின்னம் கிடைக்கவில்லை. இதுவும் போட்டியிடாததற்கு ஒரு காரணம். அதே நேரத்தில் தேர்தலை நாங்கள் புறக்கணிப்பதாகக் கூறுவது தவறு, ஒதுங்கி நிற்கிறோம் என்பதுதான் சரி என்று கூறியுள்ளார்.

புறக்கணிப்புத்தும், ஒதுங்கி நிற்பதற்கும் வித்தியாசம் என்ன என்பதை பண்ருட்டி தான் சொல்ல வேண்டும்.

இதற்கிடையே ராஜபாளையம் நகராட்சி இடைத் தேர்தலை தேமுதிக புறக்கணிப்பதாக அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், சட்டசபை தேர்தலின் போது எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தலில் அதே முரசு சின்னம் கிடைப்பதில் எங்களுக்கு சிக்கல் நிலவுகின்றது. எனவே ராஜபாளையம் நகராட்சி தேர்தலில் தேமுதிக போட்டியிடுவதில்லை என கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது என்றார்.

சில வாரங்களுக்கு முன்பு நடந்த சட்டமன்ற இடைத் தேர்தல்களை அதிமுக புறக்கணித்தபோது அதை சரமாரியாக விமர்சித்துத் தள்ளிய பத்திரிகைகள், இப்போது உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை விஜய்காந்த் கட்சி புறக்கணிப்பதாக அறிவித்துள்ளதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

1 comment:

Unknown said...

அரசியல் கட்சிகளின் அறிய வரலாறுகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் http://www.valaitamil.com/politics_history